மதத் தலைவர்கள்,வடக்குமாகாணசபையின் மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் இணைந்து தமிழ்மக்களின் நலன்களைப் பாதுகாப்பதையும் வலியுறுத்துவதையும் நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பே தமிழ் மக்கள் பேரவையாகும்.

வடக்கு மாகாண சபை முதலமைச்சர் மாண்புமிகு சீ.வி.விக்னேஸ்வரன் அவர்களைத் தலைவராகவும் வைத்தியநிபுணர் பு.லக்ஷ்மன்,மட்டக்களப்பு மாவட்டசிவில் சமூகத்தின் செயலாளர் திரு.ரி. வசந்தராஜா ஆகியோரை இணைத் தலைமையாகவும் கொண்டபேரவையானதுமதத் தலைவர்களையும் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களையும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் உறுப்பினர்களாகக் கொண்டமைந்த அமைப்பாகும்.

தமிழ்மக்களின் நலன்கள்,உரிமைகள்,அபிலாசைகள் என்பவற்றைஅடையும் பொருட்டும் அவற்றை அடையாளப்படுத்தும் பொருட்டும் அமைக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையானது தேவையான கட்டமைப்புக்களுக்கும் துறைகளுக்கும் பொருத்தமான நிபுணர்களை இனங்கண்டுஅவர்களை உள்ளடக்கியதான உபகுழுக்களைஅமைத்துக்கொள்ளும்.

இந்த உப குழுக்கள் தமக்குக் குறித்தொதுக்கப்பட்ட இலக்குகளை குறிப்பிட்ட கால எல்லைக்குள் செய்துமுடிக்கும் என்பதுடன் தேவையான சந்தர்ப்பங்களில் உப குழுக்களின் பணிகள் நீண்டு செல்லும் பொருட்டு நிலைத்தனவையாகவும் அமையும். தமிழ்மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக் குழுவானது தேவைகளுக்கமைவாக பேரவையைக் கூட்டித்தீர்மானங்கள் எடுக்கின்ற ஏற்பாடுகளைச் செய்து கொள்ளும்.

தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையில் தற்போது இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை என்பது முற்றுப்பெற்றதன்று. இன்னமும் சிலஅரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள்,பெண்கள் பிரதிநிதித்துவம் என்பன உள்வாங்கப்பட வேண்டிய தேவையுள்ளது. இத் தேவையை நிறைவுசெய்யும் பணியில் ஏற்பாட்டுக் குழு சம்பந்தப்பட்டவர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகிறது என்பதும் இங்குகுறிப்பிடத்தக்கது.

19.12.2015 அன்று அமைக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையானதுநேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படும் போதுஅதனால் தமிழ்மக்கள் காத்திரமானபெறுவனவுகளை அனுபவிப்பர் என்பதுஉண்மை.